சொத்துக்காக பெரியப்பாவை அடித்துக் கொன்ற மகன் கைது
சொத்துக்காக பெரியப்பாவை அடித்துக் கொன்ற மகன் கைது;
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குருவியேந்தல் பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த கருவாடு வியாபாரி ராமு(68) என்பவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தம்பி மகன் பாண்டி(37) கைது; சொத்துக்காக கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குருவியேந்தல் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அருகே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை போட்டு வாழ்ந்து வந்தவர் ராமு (68). இவர் சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர். ராமு திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்தார். கருவாடு வியாபாரம் செய்து வந்த ராமு நரிக்குடி அருகே குருவியேந்தல் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் தினமும் இரவு தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜுலை 1ம் தேதி செவ்வாய்கிழமை ராமு குருவியேந்தல் பயணிகள் நிழற்குடையில் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் நரிக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில் அதில் ராமுவின் தம்பி மகன் பாண்டி(37) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று வந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் நரிக்குடி காவல் நிலைய போலீசார் சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் மகன் பாண்டியை பிடித்து விசாரித்ததில் சொத்து பிரச்சனையில் தனது பெரியப்பா ராமுவை பாண்டி கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தனியாக வசித்து வந்த ராமுவுக்கு வீடும் நிலமும் இருந்ததாகவும், அந்த நிலத்தில் பாண்டி விவசாயம் செய்து வந்ததால் அந்த நிலத்தை பணம் கொடுத்து நீயே கிரயம் செய்து வைத்து கொள் என பாண்டியிடம் ராமு கூறியதாகவும், ஆனால் பாண்டி பணம் தர முடியாது எனக் கூறியதால் ராமு வேறு ஒருவருக்கு அந்த நிலத்தை குத்தகைக்கு விட முயற்சித்ததாகவும், அது தனக்கு சேர வேண்டிய சொத்து என ராமுவிடம் பாண்டி பிரச்சனை செய்ததாகவும், இந்த பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குருவியேந்தல் பயணிகள் நிழற்குடையில் தூங்கிக் கொண்டிருந்த தனது பெரியப்பா ராமுவை பாண்டி கட்டையால் அடித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.