விளையாட்டுத் திடல் அமைத்து தரக்கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு
போராட்டம்;
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் பூவாணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஏ.தேவதாஸ், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, "கீழப்பூவாணம் மற்றும் மேலப்பூவாணம் என இரண்டிற்கும் தனித்தனியாக விளையாட்டுத் திடல் அமைத்து தர வேண்டும் என அரசைக் கேட்டு பல கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டு இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பூவாணத்திற்கு விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும். 2006-2019 வரை விளையாட்டுத் திடல் இருந்ததாக அலுவலர்கள் கூறுகின்றனர். அதற்காக அரசுப்பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டுத் திடல் எங்குள்ளது எனத் தெரியவில்லை. பூவாணம் கிராமத்தில் விளையாட்டுத் திடல் அமைக்க போதுமான இடம் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு எங்கள் கிராமத்திற்கு விளையாட்டுத் திடல் அமைத்து தர வேண்டும். தாமதமாகும் பட்சத்தில் வரும் ஜூலை 17ஆம் தேதி எனது (எம்.ஏ.தேவதாஸ்) தலைமையில் விளையாட்டு வீரர்கள், சமூக அலுவலர்கள், கிராம மக்கள் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நிலை நேரிடும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.