காவேரிப்பாக்கம்: பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம்;
காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என்பது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் லோக நாதன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தினி ஆகியோர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி பேரூராட்சியில் உள்ள மளிகை கடை, உணவகம், பழக்கடை, இறைச்சி கடை, காய்கறி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடைகளில் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், விற்பனைக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் டம்ளர், கேரி பேக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதாக அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வியாபாரிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஆய்வின்போது இளநிலை உதவியாளர் சுமதி, தூய்மை பணி மேற்பார்வையாளர் பன்னீர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.