பாபநாசத்தில் வீடு புகுந்து திருட்டு

திருட்டு;

Update: 2025-07-11 16:00 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து வெளியேறிய மர்மநபர்கள் வீட்டு உரிமையாளர் மகன் வந்ததால் அவரை தாக்கிவிட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இராஜகிரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹாஜாமைதீன் (55). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹஜினா பேகம். மகன் மாலிக் இப்ராஹிம். ஹாஜாமைதீன் தம்பி அப்துல் ஹலீம் (49). இவரது மனைவி மரியம் பர்வீன். இவர்களின் மகன் முகமது கோஷ். அண்ணன், தம்பி இருவரும் ராஜகிரியில் உள்ள வீட்டில் சேர்ந்து வசித்து வருகின்றனர். இவர்கள் அதே ஊரில் பெரிய தெருவில் காலனி வீடு ஒன்றை கட்டி உள்ளனர். நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு குடிபோய் உள்ளனர். அந்த வீடு கட்டும் பணிக்காக அனைவரும் அங்கேயே தங்கி உள்ளனர். அப்துல் ஹலீம் மட்டும் வடக்குத் தெருவில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் வந்து விட்டு மாலை காலனி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவில் வடக்குத் தெருவில் உள்ள வீட்டிற்கு ஹாஜா மைதீன் மகன் மாலிக் இப்ராஹிம் (19) மட்டும் வந்துள்ளார். வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு 2 மர்ம நபர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிக் கொண்டு இருந்துள்ளனர். மாலிக் இப்ராஹிமை கண்டு அதிர்ச்சியடைந்த மர்மநபர்கள் சட்டென்று அங்கிருந்த சின்ன டேபிளை எடுத்து அவரை தாக்கி உள்ளனர். இதனால் நிலைகுலைந்து மாலிக் இப்ராஹிம் தடுமாறிய நிலையில் அவரை பிடித்து அந்த மர்மநபர்கள் கீழே தள்ளியுள்ளனர். பின்னர் அந்த வீட்டின் மாடிப்படிகள் முழுவதும் மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தொடர்ந்து மாலிக் இப்ராஹிம் எழுந்து அலறிக் கொண்டே வெளியில் வந்துள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் அங்கிருந்து ஓடி வந்து விசாரித்துள்ளனர். பின்னர் மாலிக் இப்ராஹிம் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாலிக் இப்ராஹிம் பாபநாசம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் வீடு முழுவதும் மிளகாய் பொடியை மர்மநபர்கள் தூவி சென்ற சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News