உளுந்து விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி
விவசாயிகளுக்கு பயிற்சி;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வேம்பங்குடி - பைங்கால் கிராமத்தில், தரமான உளுந்து விதை பண்ணை அமைத்திட விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை தஞ்சாவூர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) எஸ்.மாலதி துவக்கி வைத்து தலைமை வகித்து, பேசியதாவது, "தற்போது விவசாயிகள் அனைவரும் குறைந்த காலத்தில் நல்ல வருமானத்தை பெற வேண்டுமென்றால் அதற்கு உளுந்து விதைப்பண்ணை அமைத்து பயன்பெறலாம்" என்றார். பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.ராணி பேசுகையில், "விதைப் பண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் விதைகள் மத்திய மற்றும் மாநில திட்டங்களில் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உளுந்து மட்டும் அல்லாமல் நெல், கடலை, எள் என மற்ற பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்" என்றார். விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், உளுந்து பயிரில் விதை உற்பத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்பங்கள் , இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல், மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் , உளுந்து பயிருக்கு தேவையான இலை வழி உரத்தெளிப்பு முறைகள், உளுந்து பூக்கும் பருவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக விளக்கினார். விதை பண்ணைகள் அமைக்க பருவம் வாரியான ரகங்கள் தேர்வு செய்யும் முறை, உளுந்து விதை நேர்த்தி, மேட்டுப்பாத்தி அமைத்து விதைக்கும் முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கியதுடன் உளுந்து பயிரில் விதை பண்ணை அமைத்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறியதுடன், அதிக அளவில் விவசாயிகள் ஆர்வத்துடன் விதைப் பண்ணைகள் அமைக்க விதை சான்றளிப்புத் துறையினை அணுகலாம் என பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். இப்பயிற்சியில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முனைவர். முத்துக்குமரன் (பூச்சியியல் துறை), முனைவர் . சுருளிராஜன் (நோயியியல் துறை) ஆகியோர் தொழில்நுட்ப உரை வழங்கினார்கள். மேலும் சேதுபவாசத்திரம், வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) சாந்தி மற்றும் பேராவூரணி , சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் இந்த வட்டார விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக விதைச்சான்று அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். நிறைவாக விதை சான்று அலுவலர் சங்கீதா நன்றி கூறினார்.