அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா

பாராட்டு விழா;

Update: 2025-07-13 13:22 GMT
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில், 2024 - 25 ஆம் ஆண்டு அரசு பொதுத் தேர்வில் 10, 12 ஆம் வகுப்புகளில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அரசு பொதுத் தேர்வில் 10, 12 ஆம் வகுப்புகளில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் 3 மதிப்பெண்களைப் பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவ, மாணவிகள் சில மாதங்களுக்கு முன்பு பாராட்டப்பட்டனர். இதைத்தொடர்ந்து, நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) இ.மாதவன், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதய விழா குழுத் தலைவர் து.செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் சிறப்புரையாற்றினார். பின்னர், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 10 மற்றும் 12 ஆம் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்ற 78 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுக் கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

Similar News