ஆடிப்பூரம் தேர்த்திருவிழா ஆகிய திருவிழாக்களில் தற்காலிக கடைகள் அமைப்போரும், அன்னதானம் வழங்க உள்ளோரும் உணவு பாதுகாப்புத்துறையில் அனுமதி பெற வேண்டும்

ஆடிப்பூரம் தேர்த்திருவிழா ஆகிய திருவிழாக்களில் தற்காலிக கடைகள் அமைப்போரும், அன்னதானம் வழங்க உள்ளோரும் உணவு பாதுகாப்புத்துறையில் அனுமதி பெற வேண்டும்;

Update: 2025-07-14 12:51 GMT
விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலின் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா மற்றும் மதுரை மாவட்டத்தின் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலின் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழா ஆகிய தினங்களில் விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அழகாபுரி, தாணிப்பாறை ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகள், அன்னதானங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், தத்தமது உணவு வணிகத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும், தவறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . “விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலில் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா 28.07.2025 (திங்கள்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தின் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலில் 24.07.2025 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. அத்தினங்களில் விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தாணிப்பரறை ஆகிய இடங்களில் தற்காலிக உணவுக் கடைகள் அதிகம் அமைக்கப்படவும், அன்னதானங்கள் வழங்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அவ்வாறு அமைக்கப்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அன்னதானங்களின் பொறுப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 1. அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். 2. அன்னதானம் வழங்குவோர், தாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்குக் குடிக்க வழங்கும் தண்ணீர் ஆகியவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும், முன் அனுமதி இல்லாமல் தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் எடுத்து சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது. 3. சாப்பாடு, வடை, பஜ்ஜி போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும். 4. அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. 5. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. 6. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும். 7. உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும். 8. காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. 9. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது. திருவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதி உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் 09.07.2025 அன்று திருவில்லிபுத்தூரில் நியமன அலுவலரது தலைமையில் நடைபெற்றது. அதுபோல், சதுரகிரி திருவிழாவினையொட்டி, வத்திராயிருப்பு பகுதியில் வரும் 17.07.2025 அன்று காலை 11 அணியளவில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் வத்ராயிருப்பு, தாணிப்பாறை, அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானம் வழங்கவுள்ளவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது” என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ர தெரிவித்தார்.

Similar News