தஞ்சாவூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்கல்
நிவாரண உதவி;
தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 666 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் விஷ்ணம்பேட்டை கிராமத்தைச் சார்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மகள் கீர்த்தனா கடந்த 20.05.2019 அன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்தி அணைப்பகுதியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், திருவிடைமருதூர் வட்டம், கோவில் சன்னாபுரம் பகுதியைச் சார்ந்த கோமதி என்பவரது தாயார் பொம்மி என்பவர் பாம்பு கடித்து 05.12.2019 அன்று உயிரிழந்தார். இருவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கம்பயநத்தம் கிராமம், நடுத்தெருவை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர், வீட்டின் பின்புறம் இருந்த ஒதியமரம் 11.04.2025 அன்று இரவு பெய்த மழையினால் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில், மின்கம்பி அறுந்து வீட்டின் இரும்புக்கதவில் விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பது தெரியாமல் கதவினை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தமைக்கு மனித உயிரிழப்பிற்கான காசோலைகள் அவரது வாரிசுதாரர்களான காமாட்சிக்கு ரூ.2,67,000/- மற்றும் சரஸ்வதிக்கு 1,33,000/- என ஆக மொத்தம் ரூ.4,00,000 /-க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் நிவாரணமாக வழங்கினார். இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் பெ.மணிமாறன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.