மரக்காவலசை கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-15 14:44 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டி தொடர் போராட்டம் அறிவித்த நிலையில், பேராவூரணி வட்டாட்சியர் என்.சுப்பிரமணியன் தலைமையில், அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி முடிவெடுத்தபடி, இது நாள் வரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்பதால், ஜூலை.15 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில், சேதுபாவாசத்திரம் கடைவீதியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தஞ்சை மாவட்ட சிஐடியு மீனவர் சங்கம் சார்பில், விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்த  முடிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். தொடர்ந்து அங்கேயே கோரிக்கைகளை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வீ.கருப்பையா, நவனேசன், மீனவர் சங்கம் பி.பெரியண்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஏ.மேனகா, வி.தொ.ச ஒன்றியச் செயலர் சுந்தரம், கட்டுமான சங்கம் சிவனேசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து திரண்டிருந்த போராட்டக்குழுவினரை, பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரன், சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் வருவாய் துறையினர், சேதுபாவாசத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு  அழைத்துச் சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்ததுடன், ஜூலை.17 வியாழக்கிழமை அன்று மாலை 3 மணியளவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை உட் கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Similar News