வாரச் சந்தைக்கு அனுமதி தர கோரிக்கை

கோரிக்கை;

Update: 2025-07-15 14:46 GMT
தஞ்சாவூரில் மாநகரில் வாரச் சந்தைக்கு அனுமதி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், செயலர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ், விவசாயி எஸ்.முருகேசன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: தஞ்சாவூர் மாநகரில் குரு தயாள் சர்மா திருமண மண்டபம் அருகில், ஜோதி நகர், டி.பி.எஸ். நகர், முனிசிபல் காலனி, கல்யாண் நகர் ஆகிய இடங்களில் வாரச் சந்தை மூலம் பசுமையான காய்கனிகளை மாநகராட்சி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்தச் சந்தை மூலம் காய்கறிகள் வாங்குவதற்கு அலைச்சல், சிரமங்கள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 3 வாரங்களாக இந்த வாரச் சந்தைகளைச் செயல்படுத்தக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு, தடுத்து வருகின்றனர். மக்கள் நலன் கருதியும், காய்கனி பயிரிடும் திருவையாறு சுற்றுவட்டார விவசாயிகளின் நலன் கருதியும், காய்கனி வியாபாரம் செய்யும் நலிந்த குடும்பத்தினர் நலன் கருதியும் வார சந்தைகளைத் தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் கோ.ஜெய்சங்கர் தலைமையில், பட்டுக்கோட்டை அருகே சதுக்காடு வீரக்குறிச்சி கிராம மக்கள் அளித்த மனு: சதுக்காடு வீரக்குறிச்சி கிராமத்தில் 20க்கும் அதிகமான குடும்பங்கள் 60 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல், வாழ்வாதாரமின்றி வசித்து வருகின்றனர். அரசு வழங்கும் எந்தச் சலுகையும், அரசு ஒதுக்கீடு செய்து தரும் வீடுகள் அவர்களுக்கு கிடைக்காத நிலையிலும் உள்ளனர். பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியரகத்திலும் மனைப் பட்டா கோரி பல முறை கேட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் விசாரித்து வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Similar News