பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களை அப்புறப்படுத்த முயற்சி.... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீட்டு மனை பெற்றுத் தரப்பட்டது 

உடனடி நடவடிக்கை;

Update: 2025-07-15 15:04 GMT
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கண்டியூர் வடக்குத் தெருவில் அரசு புறம்போக்கு இடத்தில், பத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். அந்த இடம் கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் என்ற சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளதால், கோவிலுக்கு கடந்த 50, 60 ஆண்டுகளாக வாடகை செலுத்தி வந்துள்ளனர்.  இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அறநிலையத்துறை நிர்வாகம் குடியிருந்து வரும் மக்களை அப்புறப்படுத்த, அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78 இன் படி நோட்டீஸ் அனுப்பி வழக்கு நடந்து வந்தது.  சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு என்ற வருவாய்த் துறையிடமிருந்து பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் உள்பட பல ஆவணங்களை இணையாணையர் நீதிமன்றம் புறக்கணித்து அம்மக்களை அப்புறப்படுத்தும் உத்தரவு பிறப்பித்தது.  அதன்படி ஜூலை 15 செவ்வாய்க்கிழமை காலை 4 வீடுகளை அப்புறப்படுத்த வருவாய்த்துறை, அறநிலையத்துறை, தீயணைப்பு மற்றும் காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் அந்த இடத்திற்கு வந்தனர்.  இதையடுத்து அடிமனை சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். இது அரசு புறம்போக்கு இடம் தான், அறநிலைத்துறைக்கு சொந்தமானது அல்ல என்ற விஷயம் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம், வீடு, தற்காலிகமாக தங்குமிடம் போன்றவை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தப்பட்டது. அதுவரை வீடுகளை அப்புறப்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாதிக்கப்படும் 4 குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்குவதாக, திருவையாறு வட்டாட்சியர் முத்துக்குமார் ஒப்புக்கொண்டு உடனடியாக பட்டாவை வழங்கினார். மீதமுள்ள குடும்பங்களுக்கு மாற்று இடம், பட்டா வழங்காமல் வீடு இடிக்க வரமாட்டோம் என வட்டாட்சியர் மக்களிடம் உறுதியளித்தார்.  இதில், அடிமனை சங்க மாவட்ட செயலாளர் எம்.ராம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், சிபிஎம் நிர்வாகிகள் எம்.கதிரவன், வெண்ணிலா, கிளைச் செயலாளர் ராமமூர்த்தி, வாலிபர் சங்கர் தோழர்கள் கிருஷ்ணா, சிவராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான தோழர்கள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். அடிமனை சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், வாலிபர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரப்பட்டது.

Similar News