நிகழ்த்துக் கலைகளில் திருநங்கையர் வாழ்வியல் சிறப்பு கருத்தரங்கம்
கருத்தரங்கம்;
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் இலக்கியத்துறையின் சார்பாக, 'நிகழ்த்துக் கலைகளில் திருநங்கையர் வாழ்வியல்' எனும் பொருண்மையில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் சி.அமுதா தலைமை வகித்துப் பேசினார். பதிவாளர் கோ.பன்னீர்செல்வம் வாழ்த்திப் பேசினார். நிகழ்த்துக் கலைகளில் திருநங்கையரின் பங்கு எனும் பொருண்மையில் நாட்டியக் கலைஞர் திருநங்கை தி.இராஜகுமாரி, திருநங்கை குரு கே.வனிதாஸ்ரீ ஆகியோர் உரையாற்றினர். விடுதலைப் பாடல்களை மாணவர்களுக்கு எழுச்சி ஊட்டும் வகையில் திருநங்கை பாடகி பெ.வாசுகி பாடிக்காட்டினார். திருநங்கை பத்மினி பேசுகையில், "யாரும் திருநங்கைகள் என்றால் இழிவாகப் பேசக்கூடாது. பார்க்கக்கூடாது" என்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை பேசுகையில், "திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டியும், அவர்களைப் பற்றி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியும், திருநங்கையர் கல்வித்துறையில், கலைத்துறையில் சாதிக்க வேண்டியும் ஒருநாள் சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார். நிகழ்வில் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜே.தேவி வரவேற்றார். இலக்கியத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.தனலட்சுமி நன்றி கூறினார். நிகழ்வை முனைவர் பட்ட ஆய்வாளர் ச.வாசுதேவன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.