தூர்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியல்;

Update: 2025-07-16 17:02 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்குட்பட்ட பாலத்தளி கிராமத்தில், சுமார் 125 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட கடமாங்கால் ஏரி அமைந்துள்ளது. பாலத்தளி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு, நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. இந்த ஏரி, கடந்த 25 ஆண்டுகளாக தூர்வரப்படாமல் போனதால், ஏரியின் உள்புறம் மண் சேர்ந்து, தரைத்தளம் உயர்ந்து,  நீர் சேமிப்பு கொள்ளளவு குறைந்து, கோடை காலத்தின் துவக்கத்திலேயே தண்ணீர் இன்றி வறண்டு வந்தது. இதையடுத்து கிராம மக்கள், தன்னார்வலர்கள், மற்றும் மெகா பவுண்டேசன் ஆகியோர் இணைந்து ஏரியை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி தூர்வாரும் பணியை  தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி, பேராவூரணி எம்.எல்.ஏ. நா.அசோக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, தூர்வாரும் பணி மற்றும் கரைகள் சீரமைப்பு பணிகள், கடந்த 48 நாட்களாக  நடைபெற்று வருகிறது. இதில் ஒரு டன் அளவுக்கு குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், வருவாய்த் துறை மூலம் ஏரியை முழுமையாக அளவீடு செய்து வழங்கப்பட்டது. இதனால், ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், பேராவூரணி வடக்கு அ.தி.மு.க., ஒன்றியக் கழக செயலாளர் உ.துரைமாணிக்கம், அவருக்கு நெருக்கமான அ.தி.மு.க ஆதரவு கொண்ட அரசு அலுவலர்களை வைத்துக்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், பணிகளை செய்ய விடாமலும் தடுப்பதாக கூறி, புதன்கிழமை காலை கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தூர்வாரும் பணியை துவங்க உறுதியளித்தனர். இதனால் மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மோலாக பட்டுக்கோட்டை – பேராவூரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: அதிமுக ஒன்றியச் செயலாளர் உ.துரைமாணிக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது எனக் கூறி, பணியை செய்ய விடாமல் தடுத்து  மிரட்டுகிறார். சொந்த காரணத்திற்காக, பொதுமக்கள் பயனடையக் கூடாது என நினைக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும், அரசும் இதற்கு தீர்வு காண வேண்டும்" இவ்வாறு தெரிவித்தனர்.

Similar News