தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் தனியார் திருமண மண்டபத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் புதன்கிழமை அன்று நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்துப் பேசினார். இதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், சாமிநாதன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கோ.இளங்கோவன், க.அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் ஆர்.மூர்த்தி, திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் மற்றும் முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 15 அரசுத் துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, தனித்தனி கவுண்டர்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் 46 விதமான சேவைகள் வழங்கப்பட்டன. சுற்று வட்டாரப் பகுதிகளைச் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வீட்டு மனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர். இம் மனுக்கள் மீது 45 தினங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.