பேராவூரணியில் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்;

Update: 2025-07-17 14:56 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி நகர வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை இணைந்து நடத்திய  வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு வர்த்தகர் கழக தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், தமிழ்நாடு வணிக வரித்துறை மாநில வரி அலுவலர் பரமேஸ்வரி பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் ஆண்டுக்கு விற்றுமுதல் ரூ.40 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சிறு,குறு வணிகர்கள் வருகின்ற நவம்பர் 30 ஆம்தேதிக்குள் எவ்வித கட்டணமும் இன்றி உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். ரூ.40 லட்சத்திற்கும் மேல் வணிகம் செய்யும் வணிகர்கள் ரூ.500 கட்டணத்துடன் உறுப்பினராக சேரலாம். ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு எண் பெற்ற வணிகர்கள், பதிவு எண் பெறாத வணிகர்களும் உறுப்பினர்களாக சேரலாம். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் மட்டும் சேரமுடியாது. உறுப்பினராக சேர்வதற்கு ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வணிக உரிமம் இருந்தால் போதும்.  வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, தீ விபத்து நிவாரண உதவி, விளையாட்டு போட்டி, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு உதவி, திருமண உதவி, விபத்து உதவி, நலவாரிய உறுப்பினராக இருக்கும் வணிகர்கள் எதிர்பாராமல் மரணமடைந்ததால் ரூ.5 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. அனைத்து வணிகர்களும் நல வாரிய உறுப்பினராக சேர்ந்து பயனடையலாம்" என்று பேசினார்.  கூட்டத்தில் துணை மாநில வரி அலுவலர்கள் சசிகுமார், ராவுத்தர்ஷா, மகேஸ்வரி, வர்த்தக சங்க முன்னாள் தலைவர்கள் பி.எஸ்.அப்துல்லா, ஆர்.பி.ராஜேந்திரன், முன்னாள் பொருளாளர் சாதிக் அலி மற்றும் வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News