சேதுபாவாசத்திரம் பகுதி பிரச்னைகளை தீர்த்து வைக்க வருவாய் கோட்டாட்சியர் உறுதி

சமாதானப் பேச்சுவார்த்தை;

Update: 2025-07-18 13:25 GMT
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் காரங்குடா பேருந்து நிறுத்தம் அருகில், வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் ஓட வழியின்றி, கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலைமை ஏற்பட்டது. இதேபோல், மரக்காவலசை கிராமத்தில், விவசாயிகள் வயலுக்கு செல்லும் சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். புதுத்தெரு பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி, மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளின் கழிவுநீரை மழைநீர் வாய்க்காலில் விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். சீகன்காடு பகுதியில் 3 ஆண்டுகளாக தவித்து வரும் விவசாயி ராமையாவுக்கு மின்வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், வட்டாட்சியர் சமாதானப் பேச்சுவார்த்தையில், ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஜூலை 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று கிழக்கு கடற்கரை சாலையில், சேதுபாவாசத்திரம் கடைவீதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாவட்ட சிஐடியு மீனவர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.  அதன் எதிரொலியாக, ஜூலை 17 வியாழக்கிழமை மாலை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் சங்கர் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில், அரசுத் தரப்பில், பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மீனவர் சங்கம், விவசாயிகள் சங்கம் தரப்பில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், விவசாயிகள் சங்கத் தலைவர் ருக்கூன், அகில் ராம், தாமரைச்செல்வன், கர்த்தர், பெரியண்ணன் கலந்து கொண்டனர்.  இதில், அனைத்து பிரச்சினைகளுக்கும் வரும் 30-ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.

Similar News