தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நன்கொடையாளர், முதல்வரிடம் விருது பெற்றவர் ஆகியோருக்கு பாராட்டு மற்றும் மாணவர்களுக்கு கற்றல் பயன்பாட்டு பொருட்கள் வழங்குதல் என முப்பெரும் விழா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் நீ.புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சி.கணேசன், வி.எஸ்.இளங்கோ, பெற்றோர் ஆசிரியர் கழகத் கழகத் தலைவர் சு.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பணி நிறைவு பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா. சந்திரசேகரன், மாநில குழந்தைகள் மனநல ஆலோசகர் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு முதல்வரிடம் விருது பெற்ற அங்கன்வாடி அமைப்பாளர் வண்ணக்கிளி, ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கிய சுந்தரி சோலைராஜா ஆகியோர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் தலைமை ஆசிரியர்கள் கு.பாலச்சந்தர், சு.தமிழ்ச்செல்வன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. லயன்ஸ் தலைவர் ஆதித்யன், மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், வட்டார் தலைவர் செ.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் வீர. சந்திரசேகரன் வரவேற்றார். நிறைவாக ஆசிரியை சௌ.சீதா நன்றி கூறினார்.