மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒப்புதலை விரைந்து வழங்க பிரதமரிடம் தமிழக அரசு அழுத்தம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதல், நிதி ஒதுக்கீட்டை விரைந்து வழங்கவேண்டும் என, தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு மனு கொடுத்தார்.;
மதுரையில் முதல் கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘மெட்ரோ ரயில் திட்டம்’ அமல்படுத்தப்படுகிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அதற்கான திட்ட மதிப்பீடும் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிலையில், இத்திட்டத்திற்கான நில ஆர்ஜிதம், மின்சாரம், போன்ற ஆயத்த பணிகளை முன்கூட்டியே மெட்ரோ திட்ட அதிகாரிகள் ஏற்கெனவே தொடங்கினர். இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலைய தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, தமிழக அரசு சார்பில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல், உரிய நிதி ஒதுக்கீடு , பல்வேறு தமிழக வளர்ச்சித் திட்டத்திற்கான நிதியை வழங்குதல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் நேரில் வழங்கினார்.