நாமக்கல் மாவட்டத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு 2026 தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தகவல்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விமலா, முன்னிலையில் ஜல்லிக்கட்டு 2026 தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-24 13:43 GMT

ஜல்லிக்கட்டு -2026 தொடர்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் வதை செய்வதை தவிர்த்தல், ஜல்லிக்கட்டு நிகழ்விற்கான அலுவலர்கள் குழு, விழிப்புணர்வு, முன்னேற்பாடு பணிகள், பார்வையாளர்கள் அரங்குகள் அமைத்தல், வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா நடத்துபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆகியவை குறித்து விழாக்குழுவினருடன் விவாதிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சித் தலைவரால் அனுமதி வழங்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை. மேலும், ஜல்லிகட்டு நடத்த அனுமதி கோரி (https://ahd.tn.gov.in/jallikattu/) இணையத்தில் அனைத்து விவரங்களுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்தும் ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பிராணிகள் வதை தடுப்பு குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழா குழுவினர் ஜல்லிகட்டு நிகழ்வு தொடர்பாக விதிமுறைகள் மற்றும் அரசாணைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஜல்லிகட்டு நிகழ்விற்கான காப்பீடு சான்று அளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்தப்படாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது.ஜல்லிகட்டின் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளும் குறிப்பாக காளை நுழைவது முதற்கொண்டு வெளியேறும் வரை நிகழ்வுகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடைபெறும் பகுதிக்குட்பட்ட வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், கால்நடை பரமாரிப்பு துறை உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி செயற்பொறியாளர், தீயணைப்பு அலுவலர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து நல்லமுறையில் ஜல்லிக்கட்டு நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளும் ஆன்-லைன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், விழாக்குழுவினர் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி விழாவினை நடத்த ஏதுவாக அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாமக்கல் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இதுவரை 5 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது என மாவட்ட  ஆட்சியர்  தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.வீ.பழனிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  வ.சந்தியா, உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், காவல் துறையினர், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Similar News