உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்
‘நான் முதல்வன் – உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியகரத்தில் 30.07.2025 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;
12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியகரத்தில் 28.05.2025 மற்றும் 17.06.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இம்முகாம்களில் 241 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். தற்போது, பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் இன்னும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்காக மூன்றாம் கட்டமாக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியகரத்தில் 30.07.2025 (புதன்கிழமை) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 300 மாணவ/மாணவியர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு குறைதீர் முகாமில் இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகள், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர், ஆதிதிராவிடர்/பழங்குடியின விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்புத் துறை விடுதிகளில் பயின்ற மாணவ/மாணவியர், உயர்கல்வியைத் தொடருவதற்கான உதவி தேவைப்படும் மாணவ/மாணவியர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், தெரிவித்துள்ளார்.