மோட்டார் சைக்கிள் திருட்டு: கண்காணிப்பு கேமரா மூலம் வாலிபர் சிக்கினார்
போலீசார் விசாரணை;
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேனைக்கவுண்டனூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை ரெட்டிபட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தார். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரிந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபரை தேடினர். அப்போது அந்த வாலிபர் குரங்குச்சாவடி பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை தள்ளி சென்றதை பார்த்தனர். அவரை பிடித்து சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மாமாங்கம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் கண்ணன் (21) என்பதும், மோட்டார் சைக்கிள் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.