புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் உலக மண்வள தினம்

வாலாந்தூரில் கலந்து கொண்ட 83 விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா மற்றும் மீன் அமினோ அமிலம் மற்றும் மண்வள அட்டை வழங்கப்பட்டது;

Update: 2025-12-06 13:17 GMT
புழுதேரி கிராமத்தில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் நேற்று குளித்தலை அருகே வாளாந்தூர் கிராமத்தில் உலக மண்வள தினம் குறித்த நிகழ்ச்சி விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு நடைபெற்றது. வேளாண் அறிவியல் மையம் விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம், தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா, துணை வேளாண் அலுவலர் குளித்தலை கணேசன், தொழில் நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்) குளித்தலை தமிழ்செல்வி, தொழில் நுட்ப வல்லுநர் (உழவியல்) திருமுருகன், தொழில் நுட்ப வல்லுநர் (மண்ணியியல்) மாரிகண்ணு, அனைவரும் கலந்து கொண்டார்கள். இன்றைய உலக மண்வள தினத்தில் இவ்வாண்டின் கருப்பொருளான ஆரோக்கியமான மண், ஆரோக்கியமான நகரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மண் மாதிரி எடுத்தல், மண் வள மேலாண்மை, உயிர் உரங்கள் பயன்பாடு, தக்கைப்பூண்டு, சணப்பை, நவதானிய பயிர்களை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் மண் மற்றும் பயிர்களுக்கு கிடைக்கும் பயன்கள், பாரம்பரிய நெல் இரக சாகுபடி, இயற்கை உரங்கள் பயன்பாடு, நெல் மற்றும் வாழைக்கு பஞ்சகவ்யா மற்றும் மீன் அமினோ அமிலம் தெளிப்பு முறை, அளவு மற்றும் பயன்கள், மண்வள அட்டையின் பயன்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து தொழில்நுட்ப உரை வழங்கப்பட்டது. பண்டைய காலத்தில் நண்டு ஊற நெல், நரி ஓட கரும்பு, வண்டி ஓட வாழை, தேர் ஓட தென்னை சாகுபடி செய்ய வேண்டும் என்ற பழமொழி உள்ளது. இதன் விளக்கம் பயிர்களுக்கு போதிய இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் தேவையான அளவு காற்றோட்டமும், நீரும் கிடைக்க வேண்டும் என்பதாகும். எனவே, விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் சாகுபடி செய்து, சமச்சீர் உர மேலாண்மையை கடைப்பிடித்து செலவை குறைத்து மகசூலை அதிகரிக்க வேண்டும். கலந்துகொண்ட அனைவருக்கும் பஞ்சகவ்யா மற்றும் மீன் அமினோ அமிலம் இலவசமாக வழங்கப்பட்டது. வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் மண் பரிசோதனை மேற்கொண்ட விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டது. 83 விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Similar News