ஆடித்திருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்;
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ந் தேதி ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. 25-ந்தேதி ஆடி வெள்ளி பூஜை, நேற்று முன்தினம் ஆடிப்பூரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று இரவு கோவில் முன்பு கம்பம் நடும் விழா நடந்தது. முன்னதாக அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. கம்பம் நடுதலை முன்னிட்டு அம்மனுக்கு திருக்கல்யாண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருக்கல்யாண அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கம்பம் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. இரவு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 6-ந்தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 8-ந்தேதி கோட்டை மாரியம்மனுக்கு முதன் முறையாக தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி.என். சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோர் செய்திருந்தனர்.