குடிநீா்த் திட்டங்களில் குளறுபடி: திண்டுக்கலில் குடிநீா் விநியோகம் பாதிப்பு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த சில மாதங்களாக 3 நாள்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் சுமாா் 2.50 லட்சம் மக்களுக்கு, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து நாளொன்றுக்கு 16 மில்லியன் லிட்டா், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 7 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன. சிறப்பாகச் செயல்பட்ட இந்தத் திட்டங்கள் மூலம் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டங்கள் மூலம் 14 மில்லியன் லிட்டா் பெறப்பட்டு வந்த தண்ணீரின் அளவு தற்போது 4 மில்லியன் லிட்டராகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, மாநகராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்குப் பதிலாக 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கலுக்கு பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்தததற்கு, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேகத்தில் மாநகராட்சியின் கண்காணிப்புக் குறைபாடுகளும், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு குடிநீா் வடிகால் வாரியத்துக்கான நிலுவைத் தொகையுமே காரணம் எனக் கூறப்படுகிறது.