குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் -போக்குவரத்து பாதிப்பு மற்றொரு இடத்தில் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு;
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த பகுத்தம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு கீராநகர் பகுதியில் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் இன்று காலை பகுத்தம் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் மற்றும் பவானி சாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் சீராக தண்ணீர் வராததால் சிரமம் படுவதாக தெரிவித்தனர். இதை அடுத்து அதிகாரிகள் உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதைப்போல் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், உத்தண்டியூர் அடுத்த கிரங்காட்டூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் மறியலுக்கு முயன்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலுக்கு முயன்ற பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.