யாலையால் பொதுமக்கள் பீதி
தாளவாடி அருகே 2 காட்டு யானைகள் சுற்றி திரிவதால் கிராம மக்கள் பீதிஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தண்ணீரை தேடி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களையும் வழிமறித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருப்பதை தடுப்பதற்காக தண்டவாள தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் இருந்து சமீப காலமாக தமிழகம் வனப்பகுதி நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் அதிக அளவில் யானைகள் வந்து முகாமிட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மன்னன் குழி கிராமம் அருகே சுற்றி வந்தது. அந்த வழியாக சென்று வாகன ஓட்டி இரண்டு காட்டு யானைகள் சுற்றி திரிவதை கண்டு அச்சம் அடைந்தனர். அந்த இரண்டு காட்டு யானைகளும் மன்னன் குழி கிராமத்துக்குள் சென்று விடாத வகையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் அந்த இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதே போல் ஆசனூர் வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு தமிழகத்திலிருந்து கர்நாடகாவை நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அந்த மினி லாரியை வழிமறித்து சாலை நடுவே நின்றது. இதனால் லாரியில் வந்த டிரைவர் அச்சம் அடைந்து லாரியை பின்னோக்கி சற்று தொலைவில் நிறுத்தினார். நடு சாலையில் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,தற்போது தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து யானைகள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வருகின்றன. அங்கு யானைகள் ஊருக்குள் செல்லாத வகையில் தண்டவாள தடுப்பு வேலிகள் அமைத்துள்ளதால் யானைகள் அங்கிருந்து தமிழக நோக்கி வருகிறது. ஆசனூர், தாளவாடி வனச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றனர்.