ஜெயங்கொண்டம் அருகே நடமாடும் மதுவிற்பனை, மணல் கொள்ளையை தடுக்கக் கோரிபொதுமக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே நடமாடும் மதுவிற்பனை, மணல் கொள்ளையை தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
அரியலூர், ஆக.12- அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த தூத்தூர் கிராமத்தில், நடமாடும் மது விற்பனை மற்றும் மணல் ùகொள்ளயை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அரசு மதுமானக் கடையில், அதிகமாக மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து, அதனை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். மேலும் மதுபானம் வேணும் என்று கைப்பேசியில் தகவல் தெரிவித்தாலும், நேரடியாக வீடுகளுக்கே சென்று மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றனர்.இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும், மதுவிற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தூத்தூர் காவல் நிலையத்துக்கு, அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த தூத்தூர் கிராமப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூரில் இருந்து அரியலூர் சென்ற அரசுப் பேருந்தை ஏலாக்குறிச்சி சாலையில் சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மது விற்பவர்கள் மீதும், மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முழக்கமிட்டனர்.தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த தூத்தூர் காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் கலைந்து செல்லவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்து வந்த நிலையில், ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிசக்கரவர்த்தி, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் இனி இந்த தூத்தூர் கிராமத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் யாரும் விற்பனை செய்யமாட்டார்கள், யாரேனும் அப்படி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். :