மருத்துவர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளர்த்த கோரிக்கை.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் மனு அளிப்பு

மருத்துவர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளர்த்த கோரிக்கை வைத்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.;

Update: 2025-08-12 14:16 GMT
அரியலூர், ஆக.12- மருத்துவர்கள் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர்,அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.அச்சங்கத்தினர் அளித்த மனுவில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக ஸ்டேஷன் சீனியாரிட்டி உள்ள மருத்துவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒர் ஆண்டு விதியினை அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் மருத்துவக் கல்வி மருத்துவம் மற்றும் ஊரக பணிகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆகிய மூன்று துறைகளிலும் பணியாற்றும் சுமார் 20,000 மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள்.நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில் சட்டரீதியாக பல வழக்குகளை அரசு சந்திக்க நேரிடலாம். இது போன்ற வழக்குகள் பதவி உயர்வு கலந்தாய்வுகளையும், இடமாறுதல் கலந்தாய்வுகளையும் தாமதப்படுத்தும், தற்பொழுது அரசு மருத்துவர்கள் அனைவரும் "நலம் காக்கும் ஸ்டாலின்" போன்ற மக்கள் பெரிதும் பயனடைய கூடிய மகத்தான திட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு ஆண்டு விதி போன்ற சிறு விசயங்களை நடைமுறைப்படுத்த அரசு பிடிவாதமாக இருப்பது பெரும் பாதிப்பை உருவாக்கும். ஆகையினால் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஒரு ஆண்டு விதியினை தளர்த்தி அனைத்து மருத்துவர்களும் கலந்து கொள்ளும் வகையில் கலந்தாய்வுகளை நடத்த வேண்டும்.இந்த விசயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலர் உடனே தலையிட்டு ஒரு ஆண்டு விதியினை தளர்த்தி கலந்தாய்வுகளை நடத்த வழி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனு அளிக்கும் போது, அச்சங்கத்தின் தலைவர் கொளஞ்சிநாதன், செயலர் குணசேகர் பொருளாளர் சரவணன், உதவிப் பேராசிரியர்கள் பாராதிராஜா, காத்திகேயன், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News