வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக நவம்பர் வரை வாய்ப்பு..
வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக நவம்பர் வரை வாய்ப்பு..;
வணிகர் நலவாரியத்தில் நவம்பர் மாதம், 30ம் தேதி வரை கட்டணமின்றி உறப்பினராக சேர வாய்ப்புள்ளதாக வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு, வணிகர் நலன் காக்க, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை அமைத்துள்ளது. இதில், உறுப்பினராக சேர்வதற்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். ராசிபுரம் அனைத்து வணிகர் சங்க தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். வணிக வரித்துறை உதவி ஆணையர் யாதவன் விளக்கமளித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைய, ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, தொழில்வரி அல்லது ஜி.எஸ்.டி., நகல், செல்போன் எண் ஆகியவை வேண்டும். இதில் இணைய, சொந்த இடம் அல்லது வாடகை கடையில் தொழில் செய்பவராக இருக்க வேண்டும். ஒருமுறை இணைந்தால் போதும், ஆயுள் வரை நீடிக்கும், புதுப்பித்தல் இருக்காது; வேறு எந்த அரசாங்க நல வாரியத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது. ஆண்டுக்கு, 40,000க்கும் கீழ் வணிகம் செய்பவர்களுக்கு சேர்க்கை கட்டணம் இல்லை. இந்த சலுகையை நவம்பர், 30ம் தேதிவரை பயன்படுத்திக்கொள்ளலாம் அதற்கு மேல், அனைவரும், ரூ. 500 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும். குடும்ப நலநிதியாக இதற்கு முன், 3 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, இது 5 லட்ம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கல்வி உதவித்தொகை, விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை, தீ விபத்து தொகை, பெட்டிக்கடை வைக்க உதவித்தொகை, விபத்து உதவித்தொகையும் வழங்கப்படும். உறுப்பினராக இணைந்த பிறகு, ஒரு வருடத்திற்கு பிறகுதான் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்றார். தொடர்ந்து வணிகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.