சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
முன்பதிவு செய்ய நாளை கடைசி நாள் கலெக்டர் தகவல்;
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 22-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. பள்ளி பிரிவில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இவர்கள் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், கைப்பந்து, கேரம், செஸ், கோ-கோ ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளலாம். கல்லூரி பிரிவில் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பொதுப்பிரிவில் 15 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் பங்கு கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. இவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, வீல்சேர் மேஜைப்பந்து, எறிபந்து, கபடி ஆகிய போட்டிகள் நடைபெறும். அரசு ஊழியர்களுக்கும் வயது வரம்பு இல்லை. போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான இணைய தள முன்பதிவு நாளை (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன. https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in ஆகிய இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.