கரூர் அருகே சோழர் கால கல்வெட்டு

கல்வெட்டு;

Update: 2025-08-20 16:30 GMT
கொங்கு மண்டலத்தின் பெரும் வரலாற்றையும் கொங்கு மக்களின் பெரும் நம்பிக்கையையும் கொண்டு திகழும் பொன்னர் – சங்கர் வரலாற்று தொன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டி திருப்பூர் கிருஷ்ணகுமார், கரூர் தங்கராஜ் ஆகியோர் அழைப்பின் பேரில், அப்பகுதியில் காணப்படும் வரலாற்று எச்சங்களைத் தேடி, அப்பகுதியில் வரலாறு, தொல்லியல் மற்றும் சுவடியியல் ஆய்வாளரும் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதருமான முனைவர் மணி.மாறன் மற்றும் அவர்தம் மாணவர்கள் இரண்டு நாட்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.  மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் தொடங்கிய ஆய்வின் தொடர்ச்சியாக சங்கரன்மலை பகுதி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது சங்கரமலையில் உள்ள கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.  இதுகுறித்து முனைவர் மணி. மாறன் கூறியதாவது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சித்தலவாய் ஊராட்சிக்குட்பட்ட சங்கரன்மலையின் தென்புறத்தே சுமார் 220 அடி உயரத்தில் இரு பிளவுகளுக்கு இடையில் யாரும் எளிதில் சென்று அடைவதற்கு சிரமப்படக்கூடிய பகுதியில் சுமார் பத்தடி உயரம் 12 அடி அகலத்திற்கு 23 வரிகள் கொண்ட இரண்டு பெரும் கல்வெட்டுகளும் அதே பகுதியில் மலைப் பாறையின் கிடைமட்ட நிலையில் ஒரு கல்வெட்டும் ஆக மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.  இக்கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்க சோழன் கால (கி.பி. 1178 – 1218) கல்வெட்டுகளாகும். இவன் பாண்டியர்களை வென்றதால் சோழபாண்டியன் என்றும் அழைக்கப் பெற்றான். ‘‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனாரின்மைக் கொண்டான் தட்டையூர் நாட்டு உடையான் சங்கரமலை உடையார்கோயில் எனத் தொடங்கும் இக்கல்வெட்டு 12 வரிகளும் அதற்கு கீழாக மற்றொரு கல்வெட்டு 11 வரிகளுடனும் கிடைமட்டத்தில் பாதி சிதைந்த நிலையில் 15 வரிகள் கொண்ட கல்வெட்டும் காணப்படுகிறது.  அதே இடத்தில் பாறையின் தரைத்தளத்தில் ஒரு நீண்ட கல்வெட்டுத் தொடர் காணப்படுகிறது. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் தட்டையூர் நாட்டு உடையார் சங்கரமலை உடையார் கோயில் தானத்தாருக்கு என்று தொடங்கும் நீண்ட பெரும் கல்வெட்டில் பழுதுற்றுக் காணப்படும் கோயில் திருப்பணிக்கும் அமுதுபடிக்கும் வெஞ்சனத்திற்கும் நிலம் தானமாக வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது.  கொடையாக வழங்கப்பட்ட நிலத்தின் நான்கெல்லையும், கீழ்நோக்கிய கிணறும் மேல்நோக்கிய மரமும் உட்பட்ட நிலமும் வழங்கப்பட்ட செய்தியும் மண்டப விநியோகம், ஓலைச்சம்புடம், வேலைக்கார சிவகணங்கள், கார்த்திகைப்படி, வெண்ணெய், எண்ணெய், செக்கிறை போன்றவையும் திருநாமத்துக் காணியாகத் தந்தோம். இதனைக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக் கடவதாக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இவை காளிங்கராயன் எழுத்து, கச்சிராயன் எழுத்து, விழுப்பதராயன் எழுத்து என்று தொடர்புடைய உயர்நிலைப் பணியாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.  அதே வரிசையில் அடுத்தமைந்த கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான், ஆதனூர் நாட்டு குட்டையூர் நாட்டு உடையார் சங்கரன் மலை கோயில் தானத்தாருக்கு இந்நாட்டு பழனி தேவதானம், திருமலை அடிவாரத்து சிவபுரம் நான்கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் புஞ்சை நஞ்சையும் மேல்நோக்கிய மரமும் கீழ்நோழ்க்கிய கிணறும் காணிக்கை காளிங்கராயன் விநியோகம் வேலைக்கார சிவகணங்கள் தறிஇறை, செக்கிறை, தட்டார் பாட்டம், அமுதுபடி, பூஜை, திருப்பணி போன்ற பணிகளுக்காக தானம் வழங்கப்பட்டதை குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகள் குலோத்துங்க சோழனின் 12 மற்றும் 18 ஆட்சியாண்டில் வெட்டப்பட்டவை ஆகும். கிடைமட்டத்தில் காணப்படும் கல்வெட்டும் கோயிலுக்கு தந்த தானம் பற்றியே குறிப்பிடுகிறது. இதே மலையின் அடிவாரத்து வடபகுதியில் ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரைகோட்டு உருவமாக காளையின் உருவமும், அதன் அருகே இரண்டு மனித உருவங்களும், அதனையொட்டி சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மலைக்கோயிலின் கிழக்கு திசையில் மலை அடிவாரத்தில் காணப்படும் சிறு குன்றத்தின் அடியில் நவகண்டம், சேவல் வரைகோட்டு உருவமாக வெட்டப்பட்டுள்ளது. இந்நவகண்டத்தில் ஒரு மனிதன் கால்களை அகல விரித்து தரையில் ஊன்றி நிற்கின்றான். அவனுடைய இடது கை தலையின் உச்சியில் உள்ள குடுமியைப் பிடித்தவாறு உள்ளது. வலது கையில் உள்ள நீண்ட வாளால் தன் கழுத்தை அரிந்து கொள்ளும் செய்கை இப்பாறையில் பதிவு பெற்றுள்ளது.  இந்த நவகண்டத்தின் காலம் 15ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் மேலும் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகளைக் கண்டறிய முடியும் என்றும் மணி. மாறன் தெரிவித்தார்.

Similar News