பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி தஞ்சையில் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மண்டல தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் கழகம் சார்பில், தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாரி, பொருளாளர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் துணைத்தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை வெளியிட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வழங்கப்படாத பேராசிரியர் பணி மேம்பாடு உடன் வழங்க வேண்டும். புத்தொளி, புத்தாக்க பயிற்சி நிபந்தனைகளை கால நீட்டிப்பினை நீட்டித்து வழங்க வேண்டும். கல்லூரிக் கல்வி பணியில் பணியாற்றும் அரசுக் கல்லூரியின் மூத்த ஆசிரியர் ஒருவரை கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும். முனைவர் பட்டம் பெறாத ஆசிரியர்களுக்கு இணை பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க உரிய செயல்முறைகளை வெளியிட வேண்டும். அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 100 முதல்வர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வினை நடத்த வேண்டும். கருத்தியல் அடிப்படையில் வழங்கப்பட்ட பணி மேம்பாடுகளுக்கு உரிய நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். காலியாக உள்ள 125 நூலகர் பணியிடங்களையும், 95 உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கல்லூரி ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் நிதியினை உயர்த்தி வழங்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தஞ்சை மண்டலத்தில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.