பனை விதை சேகரித்து அரசு பள்ளி மாணவர்கள்
ஒரு கோடி பனை நடும் நெடும் பணிக்கு 50 ஆயிரம் பனை விதைகளை சேகரித்த நீடாமங்கலம் மாணவர்கள்;
மாநில நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம், திருவாரூர் மாவட்ட வனத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம் இணைந்து முன்னெடுக்கும் டெல்டாவில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கு பனை விதைகள் சேகரிக்கும் பணி நீடாமங்கலத்தில் தொடங்கியது. நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பனை விதைகளை சேகரித்தனர். நீடாமங்கலம்- மன்னார்குடி நெடுஞ்சாலை, நீடாமங்கலம்- தஞ்சாவூர் நெடுஞ்சாலை, நீடாமங்கலம்- கும்பகோணம் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பனை மரங்களில் தானாக விழுந்த பனம் பழங்களை சாக்குகளில் சேகரித்து லாரியில் ஏற்றி வந்து நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள பனை விதை வங்கியில் இருப்பு வைத்துள்ளனர். ஒரே நாளில் 50 ஆயிரம் பனை விதைகளை சேகரித்த நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பனை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். பனை விதை வங்கியை பேரூராட்சி தலைவர் ஆர்.ராம்ராஜ் தொடங்கி வைத்து பேசுகையில், பனை மரத்தின் ஆழமான மற்றும் வலுவான வேர்கள் மண்ணை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வதால், கடற்கரை மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்கிறது. அதன் அடர்த்தியான வேர்த்தொகுதி, மரம் வளரும் பகுதியைச் சுற்றியுள்ள மண்ணைப் பாதுகாத்து, காற்று மற்றும் நீர் மூலம் ஏற்படும் மண் அரிப்பு மற்றும் கடலோர அரிப்பிலிருந்து நிலத்தைப் பாதுகாக்கிறது. விவசாயிகளுக்கும், அனைத்து உயிர்களுக்கும் பயனுள்ள பனை மரத்தை அனைவரும் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன், நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் து.ரமேஷ், நீடாமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த் மேரி இராபர்ட், தீயணைப்புத்துறை ஓய்வு பெற்ற அதிகாரி ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.