மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் ரயிலில் அருவி கொட்டிய தண்ணீர் - பயணிகள் அவதி !
மேட்டுப்பாளையம்–கோவை ரயிலில் தண்ணீர் கசிவு காட்சி வைரல்;
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு பயணிகள் ரயிலும்,சென்னைக்கு தினசரி ரயிலும்,திருநெல்வேலி,தூத்துக்குடிக்கு வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.இது மட்டுமன்றி யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்பு வாய்ந்த மலை ரயிலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் இயக்கப்படுகிறது. இதனிடையே தற்போது மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 8:20க்கு கோவைக்கு பயணிகள் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது,அங்கிருந்த ரயில் பெட்டி ஒன்றில் இருந்த கழிவறையின் அருகே அருவி போல் தண்ணீர் கொட்டி வந்துள்ளது.இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை ரயில் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.