பூக்கடை மீது கார் மோதி விபத்து : வியாபாரி காயம்

ஆறுமுகநேரி அருகே சாலையோரம் இருந்த பூக்கடை மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி காயமடைந்தார்.;

Update: 2025-08-24 06:24 GMT
கடலூரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது குடும்பத்தினர் 2 பேருடன் நேற்று காரில் புறப்பட்டு திருச்செந்தூருக்கு வந்துகொண்டிருந்தார். காரை வெற்றிவேல் ஒட்டினார். காலை 7 மணி அளவில் திருச்செந்தூர் சாலை ஆறுமுகநேரி சிவன் கோவில் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. காரை நிறுத்த வெற்றிவேல் முயற்சி செய்த பிறகும் நிற்காமல் சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது வேகமாக மோதியது. ஆனாலும் கார் நிற்காமல் அருகிலிருந்த பூக்கடைக்குள் புகுந்துவிட்டது. அப்போது பூக்கடைக்குள் மலர் மாலைகளை தொங்கவிட்டுக்கொண்டிருந்த கடை உரிமையாளர் லட்சுமணன் (56) காயமடைந்தார். அவர் உடனே மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் பூக்கடையின் முன்பகுதியும், காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கார் வேப்ப மரத்தின் மீது மோதியபோது கிளைகள் முறிந்து சாலையின் நடுவில் விழுந்ததால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரானது.

Similar News