கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடரும் – காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் !
ஆப்பரேஷன் கிளீன் கோவை தொடரும் – காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரிக்கை.;
கோவையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்ததாவது: இந்த சோதனையில் 13 பேர் கைது செய்யப்பட்டு, 55 சந்தேக நபர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா, 8 ஆயுதங்கள், போலியான பதிவு எண்கள், ஆவணமற்ற 46 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் நால்வருக்கு ஏற்கனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாகவும், ஒருவரோ வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். கல்லூரி இடைநிறுத்தம் செய்த சில மாணவர்களும் இதில் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அவர், அவர்களுக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் படிப்பில் ஈடுபடுத்தப்படும் என்றார். போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்லூரி மற்றும் விடுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்தகைய சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.