சேலத்தில் தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மாவட்ட முதன்மை கோர்ட்டு உத்தரவு;

Update: 2025-08-30 03:26 GMT
சேலம் பழைய சூரமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 55). இவர் சேலம் லீபஜார் ரெயில்வே கூட்ஸ் ஷெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் அவருடைய உறவினரான காளிதாஸ் (32) என்பவர் வசித்து வந்தார். இவர் சுடுகாட்டில் வெட்டியான் வேலை பார்த்து வந்தார். காளிதாஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு நல்லதம்பியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி மதியம் காளிதாஸ் மது குடித்துவிட்டு வந்து நல்லதம்பி வீட்டு முன்பு நின்று சத்தம் போட்டு கொண்டிருந்தார். இதனை அவர் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் இருந்த காளிதாஸ் அன்று இரவு மீண்டும் நல்லதம்பியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த நல்லதம்பியின் தலையில் கல்லை போட்டு காளிதாஸ் கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காளிதாசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீர்ப்பு அளித்தார்.

Similar News