செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி

கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் கலந்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி நீர், கழிவுநீராக மாறி வருகிறது;

Update: 2025-08-31 05:45 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில், செம்பரம்பாக்கம் ஏரி, சென்னையில் இருந்து, 40 கி.மீ., தொலைவில் உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து உருவாகும் கூவம் ஆறு, அரண்வாயல் பகுதியில் கிருஷ்ணா கால்வாயாக பிரிந்து, தண்டலம் சவீதா கல்லுாரி அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. அதேபோல், கூவம் ஆறு புதுச்சத்திரம் அணைக்கட்டு பகுதியில், பங்காரு கால்வாயாக பிரிந்து நேமம், குத்தம்பாக்கம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. இதில், தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்துவ கல்லுாரி மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. பங்காரு கால்வாயில் திருமழிசை, குத்தம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஏரியில் கலக்கிறது. ஒரு மாதத்திற்கு முன், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா கால்வாயில் கலக்காதவாறு, நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாயின் இருபுறமும் கரைகளை பலப்படுத்தினர். சில நாட்களாக பெய்த மழையால், கால்வாயின் இருபுறமும் கரைகள் சேதமடைந்து, கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் கலந்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி நீர், கழிவுநீராக மாறி வருகிறது. நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பங்காரு மற்றும் கிருஷ்ணா கால்வாய் பகுதிகளில், விரைவில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்' என்றார்.

Similar News