குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி
சேதமான சாலைகளை சீரமைக்க, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட 12 மற்றும் 14ம் வார்டுகளில், சரளா நகர், தேவா நகர், விக்னேஷ் நகர், பிரியங்கா நகர், சரோஜினி நகர், ஜெமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் சரளா நகர் பிரதான சாலை வழியே சென்று வருகின்றனர். இந்த நிலையில், பாதாள சாக்கடை பணிக்கு குழாய் பதிக்க, எட்டு மாதத்திற்கு முன், சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. இதனால், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுது. இதையடுத்து, சேதமான சாலை சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. இதனால், தற்போது சாலை படுமோசமாக மாறியுள்ளது. போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக சாலை உள்ளதால், அப் பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மழை பெய்யும் போது, சாலை நடுவே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமான சாலைகளை சீரமைக்க, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.