நவராத்திரி கொலு பொம்மைகள் காஞ்சியில் தயாரிப்பு தீவிரம்

சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் இரவு, பகலாக நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்;

Update: 2025-09-01 12:12 GMT
நவராத்திரி விழா செப்., 22ம் தேதி துவங்குகிறது. கோவில், வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கொலு பொம்மை வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. விழாவையொட்டி, சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் இரவு, பகலாக நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெளியூரைச் சேர்ந்தவர்கள், காஞ்சிபுரத்திற்கு வந்து நவராத்திரி கொலு பொம்மைகளை தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர். நேரில் வர இயலாதவர்கள் 'ஆன்லைன்' மூலம் ஆர்டர் செய்கின்றனர். இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவைச் சேர்ந்த, பொம்மை விற்பனையாளரும், கைவினை கலைஞருமான டி.என்.சங்கர் கூறியதாவது: நவராத்திரியையொட்டி கடந்த ஜனவரியில், கொலு பொம்மை தயாரிக்கும் பணியை துவக்கினோம். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் சிலைகளும், சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளையும் தயார் செய்தோம். தற்போது, நவராத்திரி கொலு பொம்மை தயாரித்து வருகிறோம். கொலு வைப்பதற்கு நவ திருப்பதி, தசாவதாரம், காஞ்சி வரதர் கருடசேவை, அஷ்டலட்சுமி என, 100க்கும் மேற்பட்ட கொலு பொம்மை செட் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு செட் கொலு பொம்மை 2,500 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 15,000 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News