பணி நியமனத்தில் முறைகேடு:

சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பணி இடைநீக்கம்;

Update: 2025-09-02 09:05 GMT
சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை பார்வையிடவும், கண்காணிக்கவும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக 6 தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் இவர்களை விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்நிலையில், மாநகராட்சியில் 6 தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதில் விதிமுறைகளை மீறியதாக கூறி அம்மாப்பேட்டை மண்டல செயற்பொறியாளர் செந்தில்குமார் திடீரென பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். அதாவது இவர், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற இருந்தநிலையில் அவரை பணி இடைநீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதனரெட்டி உத்தரவிட்டுள்ளார். பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி செயற்பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது மாநகராட்சி அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News