சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரி விக்னேஷ் (வயது 23), பெயிண்டர். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஹரி விக்னேசுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத்தனர். இதனிடையே ஹரி விக்னேஷ் இறப்பு குறித்து அவரது அக்காள் பிரகதி என்பவர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், எனது தம்பியை கடந்த 28-ந் தேதி தெருநாய் ஒன்று கடித்து விட்டது. இந்த தகவலை அவர் 3 நாட்கள் கழித்து தான் என்னிடம் தெரிவித்தார். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் திடீரென இறந்துவிட்டார் என்று கூறி உள்ளார். இதனால் ஹரிவிக்னேஷ் உடல் இன்று (வியாழக்கிழமை) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் முடிவு வந்த பிறகு தான் அவர் நாய் கடித்து இறந்தாரா? அல்லது காய்ச்சல் பாதிப்பினால் இறந்தாரா? என்பது தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.