இன்ஸ்டாகிராமில் பழகி சென்னை பள்ளி மாணவியிடம் நகை பறித்த வாலிபர்
காதலிப்பதாக நடித்து சேலத்திற்கு வரவழைத்து கைவரிசை காட்டியது அம்பலம்;
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவருடைய 17 வயது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மாணவியின் இன்ஸ்டாகிராமுக்கு ஈரோட்டை சேர்ந்த 20 வயதுடைய வாலிபர் ஒருவர், ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதாக கூறி அறிமுகம் ஆகி உள்ளார். தொடர்ந்து மாணவியும், அந்த வாலிபரும் இன்ஸ்டாகிராமில் பழகினர். சில நாட்களில் அவர்கள் 2 பேரும் காதலர்களாக மாறி ஒருவருக்கெருவர் இன்ஸ்டாகிராமில் காதல் மொழி பேசி உள்ளனர். இந்த நிலையில் வாலிபர், மாணவியை நேரில் சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பி உள்ளார். அதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்து உள்ளார். கடந்த 1-ந் தேதி இரவு 9.45 மணிக்கு மாணவி சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கினார். அப்போது அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த வாலிபர், மாணவியை வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் ரெயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மாணவி கழிவறைக்கு செல்வதாக கூறி உள்ளார். அந்த வாலிபர் ரெயில் நிலையத்தில் அதிகம் திருட்டு சம்பவம் நடக்கிறது. எனவே அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கொடுத்து விட்டு செல்லவும் என்று கூறி உள்ளார். இதை நம்பிய அந்த மாணவி 3 வளையல்கள், சங்கிலி என மொத்தம் 4 பவுன் மற்றும் மடிக்கணினி, செல்போன், சார்ஜர் ஆகியவற்றை வாலிபரிடம் கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது அந்த வாலிபர் நகை உள்ளிட்ட மற்ற பொருட்களுடன் தலைமறைவாகியது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு சேலத்திற்கு வரவழைத்தனர். பின்னர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பழகி மாணவியை காதலிப்பதாக கூறி, சேலத்திற்கு வரவழைத்து, நகையை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.