புதிய கோசாலை கட்டுவதில் பிரச்சனை:போராட்டம்!
தென்திருப்பேரையில் புதிய கோசாலை கட்டுவதில் பிரச்சனை: இந்து முன்னணியினர் போராட்டம்!;
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில் உள்ள மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில் அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்றான இந்த கோவில் நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலமாகும். இந்த கோயில் 108 திவ்ய தேசங்களில் 88வது திவ்ய தேசமாகவும், நவ திருப்பதிகளில் 6வது திருப்பதியாகவும் கருதப்படுகிறது. இந்த கோவிலில் ஏற்கனவே கோசாலை இருந்த இடத்தில் புதிதாக கோசலை கட்டுவதற்கு சென்ற ஆண்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆகம விதிமுறைக்கு மாறாகவும் கோவில் கட்டுமான வாஸ்து விதிமுறைக்கு மாறாகவும், சுவாமி சப்பரம் வீதி உலா வரும் கோவிலின் பிரகாரப் பாதையில், தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் கோவில் நிர்வாகத்தினர் புதிய இடத்தில் கோசலை கட்டுமான பணி செய்வதாக இந்து முன்னணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் தலைமையில் நெல்லை கோட்டச் செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட பொறுப்பாளர்கள் அருணாச்சலம், தாடி முருகன், ஆனந்த், மாநில செயலாளர் கூட்டுறவு பிரிவு மாரி துரைசாமி, குருகாட்டூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜகுமார், ஶ்ரீ நிகரில் முகில் வண்ணன், கைங்கர்ய சபா தலைவர் சுந்தர்ராஜன், பாஜக மாவட்ட செயலாளர் டியூரபல் சபரி, மாவட்ட கலாச்சார பிரிவு செயலாளர் பாலாஜி, கணபதி, கார்த்திக் ராஜா உள்பட பக்தர்கள் ஏராளமானோர் தென்திருப்பேரையில் திடீர் போராட்டம் நடத்தியதால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் வட்டாட்சியர் செல்வக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்து முன்னணியினர் ஏற்கனவே பூமிபூஜை செய்த இடத்தில் ஆகம விதிமுறைப்படி கோசாலை அமைக்க வேண்டும். விதிமுறைக்கு மாறாக கட்டிய கட்டிடப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறினர். இதையடுத்து ஏரல் வட்டாட்சியர் செல்வக்குமார் கோசலை கட்டுவது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இது சம்பந்தமாக இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படும் வரை கட்டிட பணி வேலை நடக்காது என்றும் உறுதி அளித்தார்கள். இதைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர்.