கோவை தொண்டாமுத்தூர் அருகே ‘ரோலக்ஸ்’ காட்டு யானை பிடிக்கும் பணி !
பொதுமக்களை தொல்லை செய்து வரும் ரோலக்ஸ் காட்டு யானையைப் பிடிக்க வனத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.;
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வரும் ‘ரோலக்ஸ்’ காட்டு யானையை பிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூன்று கும்கி யானைகள், 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு கெம்பனூர் அருகே யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில், இரண்டு ஊசிகளில் ஒன்று மட்டுமே செயல்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் யானை காட்டிற்குள் சென்று கூட்டத்துடன் சேர்ந்தது. இதனால் பிடிக்கும் பணி மீண்டும் தோல்வியடைந்தது. இந்த தாமதத்தால் அதிருப்தியடைந்த விவசாயிகள் வனத்துறை முகாமை முற்றுகையிட முயன்றனர். பின்னர் காவல்துறை தலையிட்டு சமரசம் செய்தது. விவசாயிகள், "10 நாட்களாக கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டும் பயன் இல்லை. உடனடியாக ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.