ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்கள் நலனுக்கு பலன் தரும் – கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் !
ஜிஎஸ்டி குறைப்பு பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு நன்மை வழங்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.;
கோவை சுங்கம் சி.டி.சி. டிப்போ எதிரில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19.5 லட்சம் செலவில் புதிய பேருந்து நிழற்குடை கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. பூமிபூஜையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி வரிச்சீர்திருத்தம் தமிழக உற்பத்தித் துறைக்கு பெரும் பலனளிக்கும் என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவதால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சேமிப்பு வாய்ப்பு பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். அக்டோபர் முதல் வாரத்தில் கோவையில் ஜிஎஸ்டி குறைப்பை முன்னிட்டு பிரம்மாண்ட விழா நடத்தப்படும் என்றும் கூறினார். ராகுல் காந்தி தேர்தல் கமிஷன் விளக்கங்கள் வழங்கிய பின்னரும் வாக்காளர் குறித்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பேசுவது பிரதமர் மோடியின் பிரபலத்துக்கு எதிரான விரக்தியை காட்டுகிறது எனக் கண்டித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அரசியல் கூட்டங்களால் அரசு மற்றும் தனியார் சொத்துகள் சேதமடையாமல் தடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அராஜகம் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.