மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி

மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள், பயணிகள் அவதி;

Update: 2025-09-22 06:07 GMT
சென்னை-திருச்சி ரயில் மாா்க்கத்தில் மேல்மருவத்தூா் ரயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் நின்றுச் செல்கின்றன. இப்பகுதியில் ஆதிபராசக்தி சித்தா்பீடம் கோயில் உள்ளதால், விழா காலங்களில் பல ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தா்கள் ரயில்கள் மூலம் வந்துச் செல்கின்றனா். சிறப்புநிலையில் உள்ள ரயில் நிலையத்தை சுற்றுப்புற சுகாதாரத்தை பேணும் வகையில், ஒப்பந்ததாரா் மூலம் 12 தூய்மை பணியாளா்கள் தூய்மை பணியை செய்து வந்தனா். இவா்களுக்கான 4 மாத ஊதியத்தை அளிக்காமல் ஒப்பந்ததாரா் தாமதித்து வந்தாா். அதனால், ரயில் நிலையத்தை தூய்மை பணியை செய்து வந்த பணியாளா்கள் அனைவரும் வேலைக்கு வராமல் இருந்து விட்டனா். அதனால் பயணிகள் துா்நாற்றத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தின் மூலம் வேலைக்கு செல்பவா்கள், கல்லூரி கல்விக்காக செல்லும் மாணவ மாணவிகள், சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோா் தமது இரு சக்கர வாகனங்களை ரயில்நிலையத்தின் முன்புற பாதையில் நிறுத்திவிட்டு செல்கின்றனா். இது பயணிகளுக்கு சிக்கலாக உள்ளது.இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி கூறுகையில்: ரயில் நிலையம் முன் நிறுத்தப்படுகிற இருசக்கர வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்த அரசு எத்தகைய இடத்தையும் அளிக்காமல் இருந்து வருகிறது. அதனால் தான் வாகனங்களை பயணிகள் நிலையத்தின் முன்புறம் நிறுத்திவிட்டு செல்கின்றனா். மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற சென்னை ரயில்வே கோட்டமேலாளா் தான் ஏற்பாடுகளை செய்யவேண்டும் எனத் தெரிவித்தாா்.

Similar News