டாஸ்மாக் கடையை அகற்றா விட்டால் தீக்குளிப்போம்
பேச்சு வார்த்தையை புறக்கணித்து கிராம மக்கள் டென்ஷன்;
நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சிக்குட்பட்ட தையன்தோப்பு சாலையில், அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. வெண்மணச்சேரி அச்சுகட்டளை, தையன்தோப்பு ஆகிய மூன்றையும் இணைக்கும் இணைப்பு சாலைக்கு அருகில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருவதால், அந்தவழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், இங்கு கடை அமைக்கும்போது எதிர்ப்பு தெரிவித்தபோது, தற்காலிகமாக இங்கு அமைப்பதாக கூறி 4 வருடங்களாக இயங்கி வருகிறது. இதனை அகற்ற பலமுறை மனு அளித்தும், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீர்நிலைக்கு அருகாமையில் இக்கடை இயங்கி வருவதால் மது அருந்திவிட்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடை மற்றும் பாரை இங்கிருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் சார்பில் கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அது தொடர்பான பேச்சுவார்த்தை கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் கவிதாஸ் தலைமையில், டாஸ்மாக் உதவி மேலாளர் மாரிமுத்து மற்றும் போலீசார், கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உடனடியாக கடையை இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து அரசியல் கட்சியினர் பேசினர். வட்டாட்சியர் உள்ளிட்டோர் 6 மாத காலம் அவகாசம் கேட்டனர். எனவே, பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. உடனடியாக கடையை அப்புறப்படுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம், தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம் என கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து சென்றனர். பேச்சுவார்த்தையில், அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.பால்ராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன்,அதிமுக கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலை.கே.எஸ்.எஸ்.செல்வராஜ், திமுக கிளை செயலாளர்கள் ஜி.மகேஷ்கண்ணன், சி.கருணாநிதி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் வனிதா பாப்பையன், விசிக நிர்வாகி தமிழ்பாண்டியன், இளைஞர் பாசறை விடுதலை வீரமணி, அதிமுக ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.