வாடகை வீட்டில் தங்கியிருந்த வாலிபரை கொலை செய்த மர்ம நபர்கள்

வாடகை வீட்டில் தங்கியிருந்த வாலிபரை கொலை செய்த மர்ம நபர்கள்;

Update: 2025-09-23 05:49 GMT
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி கண்ணன், 26. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கடந்த ஆறு மாதங்களாக சிங்கபெருமாள் கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, உணவு 'டெலிவரி' செய்யும் வேலை பார்த்து வந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன், 27, நவீன், 23, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வதிநாதன், 22, வெங்கடேசன், 23, உட்பட, ஐந்து பேர் இவருடன் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு பாரதி கண்ணனும், ராஜனும், வீட்டின் வரவேற்பு அறையில் துாங்கினர். மற்ற மூவரும், படுக்கை அறையில் துாங்கியுள்ளனர். நேற்று அதிகாலை 3:40 மணியளவில், இவர்களின் வீட்டில் புகுந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பலினர், பாரதி கண்ணன் மற்றும் ராஜனை பீர் பாட்டில் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு, தப்பிச் சென்றனர்.அலறல் சத்தம் கேட்டு படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த மற்ற மூவரும், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில், பாரதி கண்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. ராஜனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், பாரதி கண்ணன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News