ராக்கிங் தொடர்பாக போலீசார் அறிக்கை
மதுரை உசிலம்பட்டி அருகே நடந்த ராக்கிங் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.;
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லையில், செக்காணூரனி கிராமத்தில் அரசு கள்ளர் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் கல்லூரி மாணவர்களுடன், செக்காணூரனி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில், அரசு தொழிற்பயிற்சி முதலாம் ஆண்டு மாணவர்களில் 15 வயது மாணவரை, 17 வயதுள்ள 3 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த போது நிர்வாணப்படுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் அனுப்பியுள்ளனர். இதில் சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளது போல் பாதிக்கப்பட்ட சிறுவன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது விசாரணையில் தெரிய வருகிறது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் செக்காணூரனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது போன்ற தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்பவேண்டாம் என மதுரை மாவட்ட கால்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.